நன்றி மறவேல்


ஆழ்கடலில் முக்குளித்து எடுத்துவிட்ட முத்தினை போல் தமிழ் என்னும்

பாற்கடலில் கடைந்தெடுத்த அமிர்தமே திருவள்ளுவர் எனின் மிகையாகாது.

1330   குறட்பாக்கள் மூலம் உலகையே  அளந்தவர்.. எம்மை வாழ்வாங்கு வாழ

எனவழி காட்டிச்சென்ற பெருந்தகையாளர் அருளிய நெறிகளில் செய்நன்றி

மறவாமை என்பது மகத்தானது ஒன்றே.


‘ எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் -உய்வில்லை 

செய்நன்றி கொன்ற மகற்கு’என்ற வள்ளுவனின் வாக்கு சங்கம் தொட்டு இன்று வரை

வாழும் அனைவருக்கும் உரியது அன்றோ! எந்த அறத்தை

மறந்தவருக்கும்  உய்வு உண்டு ஆனால் ஒருவர் செய்த உதவியை

மறந்து விடுபவர் எவரோ அவர்    நீண்டு நினைத்திருக்க மாட்டார்.



உண்மைதான் ….அன்பான நண்பனை ஆபத்தில் அறியலாம் என்பார்கள்.

ஆபத்து  நேரத்தில் கூட  கைவிடாத உறவுகளை  அவர்தம் உதவிகளை

மறந்து விடுதல்  எவ்விதத்தில் முறையாகும்? பூவுலகில் மனிதராய் பிறக்கின்ற

எவருமே எதையுமே எடுத்து வருவதும் இல்லை ,எடுத்துச் செல்வதும் இல்லை …அவர்  தம் நினைவுகளை மண்ணிலே விதைத்து செல்கின்றார்கள். நினைவுகள்

நலமாக  இருக்க  வேண்டின்இருப்பதை பகிர்ந்து வாழப் பழகிக் கொள்ள வேண்டும், 

பிறர் பகிர்ந்தவைகளை நினைத்து வாழ  பழக வேண்டும்.

அன்பானவர்களே,

‘ நன்றி மறப்பது நன்றன்று- நன்றல்லது

 அன்றே மறப்பது நன்று’

 என்பதும் நாம் கற்றுள்ள விடயம் அல்லவா?   நமது உயிரே போனாலும் பிறர்

  நமக்காக செய்த உதவிகளை மறந்துவிடலாகாது.

சங்கம் தொட்டு இன்று வரை நம் தாய்மொழியாம் தமிழ்மொழி கண்ட இலக்கிய

சுவடுகள் அகம் புறம் என எத்தனை எத்தனை? அவை  அனைத்துமே செய்நன்றி

மறவாத உயர் பண்பை உணர்த்த தவறியதில்லை. செஞ்சோற்று கடன் தீர்க்க

தன் உயிரையே துச்சமென துணிந்த மறவன் கர்ணனை நாம் மறந்துவிடலாகாது?

எதிரில் நிற்பது தன் உடன்பிறந்த பாண்டவர் ஐவரும் என தெரிந்த பின்னரும் கூட,

கவுரவர்களின் செயற்பாடுகள் தர்மம் அல்ல என அறிந்தும் கூட, செஞ்சோற்று

கடனுக்காக சேனை  சென்று உயிர்நீத்த பெரியோன் நம் கர்ணன் எனின் மிகையல்ல.

இராமாயணமும் இதற்கு விதிவிலக்கல்ல.  இராமபிரானை எதிர்த்து செருக்களம் சென்றுவிட்டால் இறப்பு நிச்சயம் என தெரிந்திருந்தும் தன்

அண்ணன் செய்த நன்றியை மறவேன் - என்று உறுதி பூண்ட கும்பகர்ணன் எனும்

பராக்கிரமசாலியையும் நம் தமிழ் உலகம்  மறந்துவி மாட்டாது. . செய்நன்றியை

காப்பதற்காக அவர்கள் மண்ணுலகை விட்டு  நீங்கினாலும் வரலாற்றுப் 

பொக்கிஷங்களில்  புகழ் உடனே வாழ்கின்றார்கள்.


கூடவே ,செய்நன்றி மறந்த சூரபத்மன் போன்றவர்களின் கதைகளையும் புராணங்கள் உணர்த்திட தவறவில்லை.


மாறுகின்ற மனித நாட்களில் மாற்றங்கள் மட்டுமே நிரந்தரம். எத்தனை

மாற்றங்கள் வரினும் மனிதன் தன் வடிவத்தை இழக்காது   வாழ்வான் எனின்

அவனும் வாழ்நாள் புனிதனே!

அன்பானவர்களே,

 உதவி என்று வரும் போது, உயிரும் உதவியே, உணவும் உதவியே, ஏன்?

உணர்வும் உதவியே… தள்ளாடும் வயதிலும் பிறரின் துன்பப்பொழுதுகளில்

அவர்களுக்காய் இறைவனை வேண்டி நிற்கும் முதுமை கூட மகத்தான உதவியே.

 வள்ளுவர் சொல்வதைப்போல, தன் குழந்தையை அவையத்து முந்தி இருப்பச் செயல் -என உத்தமராய்  வளர்கின்ற பெற்றோரின்  நன்றியும், இவன் தந்தை என்நோற்றான் கொல் - எனும் சொல்லைத் தேடி தருகின்ற பிள்ளையின் நன்றியும், முகம் தெரியாத உறவுகளுக்கு கூட உதவிட முன்வரும்  நல் உள்ளங்களின் உதவியும், அயலவர்களின் உறுதுணையும், ஏணியாய் ஏற்றிவிடும் ஆசிரியர்களின் உதவியும்,   நிலைத்திருப்பை உறுதிசெய்யும் பஞ்சபூதங்களின் உதவியும் …………..என இவ்வுலகில் எந்த ஒரு மனிதனும் பிறர் உதவியின்றி தனித்து வாழ்ந்திட இயலாது.


இருவரின்     சுமப்பினால் வந்தோம். நால்வரின்  சுமப்பினால் செல்வோம்.

முதல் இருவரும் இறைவன் தந்த வரம். மற்ற நால்வரும் நாம் வாழும் விதம்.

ஆக கடவுள் தந்த அழகிய வாழ்வில் கடவுளுக்கும், உதவிடும் உறவுகள்

அனைவருக்கும் நன்றியுடையவர்களாக மாறவேண்டும். காலத்தினால்

செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது என்னும் வள்ளுவன்

வாக்கிற்கிணங்க நாமும் வாழ்வோம் பிறரையும் வாழ வைப்போம் என கூறி

விடைபெறுகிறேன் நன்றி வணக்கம்

Post a Comment

Previous Post Next Post

Android